ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தடயவியல் துறை அலுவலரை, மருத்துவ மாணவிகள் தாக்கியதாக போலீசில் புகார்

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவிகள் சிலர் தன்னை தாக்கியதாக தடயவியல் துறை அலுவலர் லோகநாதன் போலீசில் புகார் அளித்தார். இதுக்குறித்து போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-05-05 03:26 GMT
திருவொற்றியூர்,  

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 53). இவர், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தடயவியல் துறையில் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். அதே ஆஸ்பத்திரியில் மருந்தியல் முதலாமாண்டு படிக்கும் முதுகலை மாணவி சரஸ்வதி, வருகை பதிவேட்டில் கையெழுத்து போடுவதை லோகநாதன் வீடியோ எடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

இதனால் வருகை பதிவேட்டில் முறைகேடு நடப்பதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி துணை முதல்வர் ஜமீலா‌, மாணவி சரஸ்வதியிடம் நடத்திய விசாரணையில் வருகை பதிவேட்டில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது.

இந்தநிலையில் துணை முதல்வர் ஜமீலா தலைமையிலான குழுவினர் முன் விசாரணைக்கு ஆஜராக நேற்று மாலை லோகநாதன் நிர்வாக அலுவலகத்தில் தன் சக ஊழியர்களுடன் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஸ்டான்லி ஆஸ்பத்திரி முதுகலை மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர், லோகநாதனை சுற்றி வளைத்து தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது சில மாணவிகள் அவரை கையால் சரமாரியாக தாக்கி, அவரது செல்போனை உடைத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி ராயபுரம் போலீஸ் நிலையத்தில் லோகநாதன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்