பொது இடங்களில் குப்பை கொட்டிய 573 பேருக்கு ரூ.14 லட்சம் அபராதம் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
பொது இடங்களில் குப்பை கொட்டிய 573 பேருக்கு ரூ.14 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதுக்குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-;
சென்னை,
சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கும், வாகனங்களில் இருந்து குப்பைகளை கொட்டுபவர்களுக்கும் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
அதேபோன்று கட்டுமான கழிவுகளை அங்கீகரிக்கப்படாத பொது இடங்களிலும், சாலைகளிலும் கொட்டுபவர்கள் மீது ஒரு டன் வரை ரூ.2 ஆயிரமும், ஒரு டன்னுக்கு மேல் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் பொது இடங்களில் குப்பை கொட்டிய 382 பேருக்கு மொத்தம் 6 லட்சத்து 82 ஆயிரத்து 100 ரூபாயும், அங்கீகரிக்கப்படாத பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டிய 191 பேருக்கு மொத்தம் 7 லட்சத்து 3 ஆயிரத்து 17 ரூபாய் என 13 லட்சத்து 85 ஆயிரத்து 117 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.