7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை சாவு
சென்னை புளியந்தோப்பில் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
திரு.வி.க. நகர்,
சென்னை புளியந்தோப்பு ஸ்டீபன்சன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் வசித்து வருபவர் வினிதா (வயது 35). குஜராத்தைச் சேர்ந்தவரான இவருடைய கணவர் ஒரு வருடத்துக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார்.
வினிதா தனது மகன், மகள் மற்றும் தம்பி, தாய் ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் வினிதாவின் 2 வயதான மகள் கவாஷ், வீட்டின் பால்கனி அருகில் உள்ள சோபாவில் நின்றபடி விளையாடிக்கொண்டிருந்தாள். திடீரென 7-வது மாடியில் இருந்து தவறி குழந்தை கவாஷ் கீழே விழுந்து விட்டாள்.
இதற்கிடையில் குழந்தை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வினிதா, வீடு முழுவதும் தேடியும் காணாததால் பால்கனி வழியாக எட்டி பார்த்தார். அப்போது ரத்த வெள்ளத்தில் தனது குழந்தை கீழே விழுந்து கிடப்பதை கண்டு அலறி அடித்தபடி கீழே ஓடிவந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை கவாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை பார்த்து வினிதா மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இது பார்க்க பரிதாபமாக இருந்தது. இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.