சேலத்தில் கனமழை: வீட்டின் சுவர் இடிந்ததில் 3 பேர் படுகாயம்
சேலத்தில் பெய்த கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேலம்:
சேலத்தில் பெய்த கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கனமழை
சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்ததால் சாலைகளிலும், தாழ்வான பகுதியிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
பெரமனூர், கிச்சிப்பாளையம், மணக்காடு, பச்சப்பட்டி, சின்னேரி வயல்காடு, சங்கர் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். பல இடங்களில் பலத்த காற்று வீசியதால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
சுவர் இடிந்து விழுந்தது
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமணிசந்திரன். இவருக்கு சொந்தமான மாடி வீடு பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் பல ஆண்டுகளாக அந்த வீட்டில் ஸ்ரீதர் வசிக்காமல் வேறு ஒரு வீட்டில் குடியிருந்து வருகிறார்.
முன்தினம் பெய்த மழை காரணமாக நேற்று காலை ஸ்ரீதரின் வீட்டின் பக்கவாட்டு (பால்கனி) சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த 3 ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 75), கொண்டலாம்பட்டி விஸ்வநாதன் (40), மூலப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஹரிஹரன் (26) ஆகிய 3 பேர் மீது சுவர் விழுந்ததில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.