ஈரோடு மாநகராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை- அதிகாரி தகவல்
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாக அதிகாரி கூறினார்.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாக அதிகாரி கூறினார்.
செவிலியர்கள்
ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் மேயர் நாகரத்தினம் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பேசிய 3-வது வார்டு கவுன்சிலர் ப.நிர்மலாதேவி பேசும்போது, ஜவுளிநகரில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஆட்சியின்போது 24 மணி நேரமும் டாக்டர்கள், செவிலியர்கள் பணியில் இருந்தனர். இப்போது மாலை 4 மணிக்கு மேல் யாரும் இருப்பதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் என்றார்.
பற்றாக்குறை
அவருக்கு பதில் அளித்து ஈரோடு மாநகர் நல அதிகாரி டாக்டர் பிரகாஷ் கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சியில் 10 நகர்நல ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்களுக்கு தலா 4 பேர் வீதம் குறைந்த பட்சம் 40 செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது பணியில் நியமிக்கப்பட்டு இருப்பவர்கள் 24 பேர் மட்டுமே. இதில் 4 பேர் மகப்பேறு விடுப்பில் இருக்கிறார்கள். எனவே 20 பேர் மட்டும்தான் பணியில் உள்ளனர். செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது.
இதில் பி.பி.அக்ரகாரம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு சிகிச்சை நடைபெறுவதால் அங்கு 24 மணி நேரமும் செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும். மற்ற நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டாயமாக செவிலியர்கள் பணியில் இருப்பார்கள். ஒருவரையே 24 மணி நேரமும் பணியில் அமர்த்த முடியாது.
தற்காலிகமாக நியமிக்கலாம்
எனவே ஈரோடு மாநகராட்சிக்கு தேவையான செவிலியர்களை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் இருந்து நியமிக்க வேண்டும். இல்லை என்றால் மாநகராட்சி மன்றத்தில் கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் அளித்தால், தற்காலிகமாக பணியிடங்களை நிரப்பலாம். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதுபோல் ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிக்கு 1,525 பணியாளர்கள் தேவை. நிரந்த பணியாளர்கள், குழு மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்கள் என்று 1,271 பேர் பணியில் உள்ளனர். இதில் தினசரி 20 சதவீதம் பேர் பல்வேறு காரணங்களால் விடுமுறையில் உள்ளனர். இதனால் 100 புதிய பணியாளர்களை எடுக்க கவுன்சிலர்களின் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. விரைவில் படிப்படியாக கூடுதல் தூய்மைப்பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தூய்மை பணியாளர்கள்
மேலும் கூட்டத்தில் மண்டல தலைவர்கள் ப.க.பழனிச்சாமி, சசிக்குமார், கவுன்சிலர்கள் தமிழ்ப்பிரியன், மங்கையர்க்கரசி, கு.ஸ்ரீஆதி கே.ஸ்ரீதர், தங்கமுத்து, ஜெகதீசன், தங்கவேல், மணிகண்டராஜா, பி.கீர்த்தனா, அ.செல்லப்பொன்னி, கோகிலவாணி மணிராசு, ஜெயமணி, ரேவதி திருநாவுக்கரசு, வி.ஜி.மோகன்குமார், சுபலட்சுமி, நந்தகோபு உள்பட கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்கள்.
அவர்கள் பேசும்போது கூறியதாவது:-
மாநகராட்சியில் தூய்மை பணிக்கு பணியாளர்கள் போதுமான அளவு இல்லை. பாதாள சாக்கடை மூடிகள் உடைந்து கிடக்கின்றன. ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட இணைப்புகள் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
மருத்துவ பரிசோதனை
பொதுமக்களுக்கு குடிநீர், சாலை வசதி, தூய்மைப்பணி இவை சரியாக கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியின் ஒப்பந்ததாரர்கள் கவுன்சிலர்களின் கோரிக்கைகளை கேட்டு, பொதுமக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க முன்வரவில்லை. அதனை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.
தூய்மை பணியாளர்களுக்கு யோகாசன பயிற்சி வழங்கவும், 3 மாதத்துக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்யவும் வேண்டும். குப்பைகளை ஒரே இடத்தில் குவிப்பதை தவிர்த்து, ஆங்காங்கே பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை சேகரிக்க கூடுதல் வாகனங்கள் வேண்டும். மாநகராட்சி டெண்டர்கள் குறித்த விவரங்கள் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். மாநகராட்சியின் கடன் குறித்தும், வட்டி குறித்தும், திரும்ப செலுத்தும் வழிகள் குறித்தும் தகவல்கள் தெரிவிக்க வேண்டும். மாநகராட்சியில் போடப்பட்ட பட்ஜெட் நகல் வழங்கப்பட வேண்டும்.
மேற்கண்டவாறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினார்கள்.
ஆணையாளர் சிவக்குமார், மாநகர் நல அதிகாரி டாக்டர் பிரகாஷ் ஆகியோர் பதில் அளித்தனர்.
குழப்பம்
இந்தநிலையில் தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் பேசும்போது, கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு மேயர், துணை மேயர் மட்டுமே பதில் அளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி கூறினார். மேயர் மற்றும் துணை மேயர் பேசும்போது, திட்டங்கள் தொடர்பான பதில்களை ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் அளிப்பார்கள் என்றனர். ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே தி.மு.க. கவுன்சிலர்களே மேயருக்கு ஆதரவாக பேசியதால் குழப்பம் ஏற்படுத்தியது.
அப்போது பேசிய மேயர், இங்கு நான் உள்பட பெண்கள் பலரும் புதிதாக இந்த மன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறோம். நிர்வாகம் செய்வதில் புதியவர்கள் என்பதால், அனைத்து கேள்விகளுக்கும் உடனடி பதில் அளிக்க முடியாது என்றார். மேலும், பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் நிர்வாக பிரச்சினைகளையும் கையாண்டு வருகிறார்கள் என்று குறிப்பிட்டார். அதற்கு சில பெண் கவுன்சிலர்கள் ஆதரவு அளித்தனர்.
இவ்வாறு மாநகராட்சி கூட்டம் நடந்தது.