ரூ.23 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட அரசு பள்ளி

பள்ளி மாணவன் கொடுத்த மனுவால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் ரூ.23 லட்சத்தில் அரசு பள்ளி புனரமைக்கப்பட்டது. அந்த பள்ளியை கலெக்டர் திறந்து வைத்தார்.

Update: 2022-05-04 20:53 GMT
திருப்பரங்குன்றம், 

பள்ளி மாணவன் கொடுத்த மனுவால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் ரூ.23 லட்சத்தில் அரசு பள்ளி புனரமைக்கப்பட்டது. அந்த பள்ளியை கலெக்டர் திறந்து வைத்தார்.
மு.க.ஸ்டாலினிடம் மாணவன் மனு
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சியில் ஆஸ்டின்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் 2-வது அலையின் போது கொரோனா தடுப்பு சிறப்பு மையம் அமைக்கப்பட்டிருந்தது. அதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேரிடையாக திறக்க வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் முத்துவளவன் ஒரு மனு கொடுத்தார். அதில் உயர்நிலைபள்ளிக்கு கட்டிட வசதி செய்து தர வேண்டுகோள் விடுத்து இருந்தார். மாணவன் முத்துவளவனின் மனுவுக்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பள்ளி கல்வி முதன்மைச் செயலாளருக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

புனரமைக்கப்பட்ட பள்ளி திறப்பு

இந்த நிலையில் தேரப்பூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த பள்ளிக் கட்டிடத்தை சீரமைத்து மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு முன் வந்தது. இதற்கிடையே ரூ.23 லட்சத்தில் பள்ளிகட்டிடம் புனரமைக்கப்பட்டு உயர்நிலைப்பள்ளி புதுப்பொலிவு பெற்றது.
 இதனையடுத்து நேற்று அரசு மேல்நிலைப்பள்ளியின் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றி வைத்தும் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.மேலும் அவர் வகுப்பறைகளையும், கழிப்பறை வசதிகளையும் பார்வையிட்டார். இதனையடுத்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

மாணவனுக்கு கலெக்டர் பாராட்டு

இதற்கிடையே தமிழக முதல்-அமைச்சருக்கு பள்ளி கட்டிட வசதி கோரிய மாணவன் முத்துவளவனை தட்டிக்கொடுத்து பாராட்டு தெரிவித்தார். மேலும் மாணவனுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சேகர், திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் உதயகுமார், ராமர், பள்ளி தலைமையாசிரியை லிங்கேஸ்வரி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சந்திரா, ஊராட்சி செயலர் (பொறுப்பு) வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் கூத்தியார்குண்டு உமாதேவி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வை.ராசு, கிராம நிர்வாக அதிகாரி, ஜான்கென்னடி, சப்-இன்ஸ்பெக்டர் சாமியப்பன், மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். தற்போது அந்த மாணவன், முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி வைத்து உள்ளார்.

மேலும் செய்திகள்