தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசத்தை யாராலும் தடுக்க முடியாது-மன்னார்குடி ஜீயர்

தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசத்தை யாராலும் தடுக்க முடியாது என்று மன்னார்குடி ஜீயர் ஆவேசமாக கூறினார்.

Update: 2022-05-04 20:40 GMT
வல்லம்
தஞ்சையை அடுத்த களிமேட்டில் கடந்த 27-ந் தேதி அப்பர் சதய விழாவையொட்டி நடந்த தேர் திருவிழாவின்போது தேர் மீது மின்சாரம் பாய்ந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை தேர் விபத்து நடந்த பகுதியையும், அப்பர் மடத்தினையும் மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார சுவாமிகள், மதுரை ஆதீனம் ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். 
தடுக்க முடியாது
பின்னர் மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்டின பிரவேசம் என்பது சம்பிரதாயத்தில் இருக்கக்கூடியது. தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசத்தை யாராலும் தடுக்க முடியாது. இந்து தர்மத்திற்கு விரோதமாக இருந்தால் அது அமைச்சர்களாக இருக்கட்டும்,  எம்.எல்.ஏ.வாக இருக்கட்டும். இந்து விரோதிகளை இந்து நாட்டில் சாலைகளில் நடக்க விடமாட்டோம்.
இவ்வாறு அவர் ஆவேசத்துடன் கூறினார்.  
மதுரை ஆதீனம்
முன்னதாக மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் நிருபர்களிடம் கூறியதாவது:-
களிமேட்டில் 93 ஆண்டுகளாக தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டு துயரமான சம்பவம் நடந்தது வருந்தத்தக்கது. மனித உயிர்கள் சாதாரணமாக இல்லை. தேர் ஓடுவது என்றால் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும். மின்சாரம் தேருக்கு இடைஞ்சலாக இருந்தால் அதை எல்லாம் எடுக்க வேண்டும். என்ன குறை ஏற்பட்டது என எனக்கு தெரியவில்லை. 
முன்னேற்பாடுகள்
இந்த சம்பவத்திற்காக நான் வருந்துகிறேன். முன்னேற்பாடுகள் செய்து இருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகி இருக்காது. இனிமேலாவது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டும்.
தருமபுரம் ஆதீனத்தை தோளில் சுமப்பேன் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது அவரது கருத்து. அதற்கு அவரை பாராட்ட வேண்டும்.
மோடி-அமித்ஷாவை சந்திப்பேன்
மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கோவில்களின் சொத்துக்களை வைத்துக்கொண்டு ஆளும் கட்சியினர் குத்தகை தொகையை தர முடியாது என மிரட்டுகிறார்கள். எனது உயிரே போனாலும் பரவாயில்லை. நான் மீட்டே தீருவேன்.
இதுபோன்று மிரட்டிக்கொண்டு இருந்தால் நான் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திப்பேன். இதைத் தவிர்த்தால் நல்லது. இனிமேல் எனக்கு கொலை மிரட்டல் வந்தால் நான் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார். 

 

மேலும் செய்திகள்