கள்ளக்காதலி செருப்பால் அடித்ததால் தொழிலாளி தற்கொலை
சாம்ராஜ்நகர் அருகே கள்ளக்காதலி செருப்பால் அடித்ததால் மனமுடைந்து அவரது வீ்ட்டிலேயே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
கொள்ளேகால்: சாம்ராஜ்நகர் அருகே கள்ளக்காதலி செருப்பால் அடித்ததால் மனமுடைந்து அவரது வீட்டிலேயே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்காதல்
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா பி.ஜி.பாளையா கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது 50). தொழிலாளியான இவருக்கு திருமணம் முடிந்து பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் பால்ராஜூக்கு அதே கிராமத்தை சேர்ந்த தெரசா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து கள்ளக்காதல் ஜோடி தனியாக சந்தித்து பேசி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
செருப்பால் அடித்தார்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினமும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தெரசா தனது செருப்பை கழற்றி பால்ராஜை அடித்ததாக தெரிகிறது. இதனால் பால்ராஜூக்கு அவமானம் ஆகிவிட்டது.
இந்த நிலையில் நேற்று தெரசா, தனது குடும்பத்தினருடன் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த சந்தர்ப்பத்தில் கள்ளக்காதலி தெரசாவின் வீட்டிற்கு சென்ற பால்ராஜ், அங்கு வைத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணத்திற்கு சென்ற தெரசா வீட்டிற்கு திரும்பி வந்தபோது பால்ராஜ் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஹனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்ட ஹனூர் போலீசார் பால்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கருத்து வேறுபாடால் பால்ராஜை, தெரசா செருப்பால் அடித்துள்ளார். இதனால் மனமுடைந்து பால்ராஜ் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக தெரசாவை போலீசார் கைது செய்தனர். ேமலும் அவர் மீது ஹனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.