காலையில் சுட்டெரித்த வெயில்; மாலையில் குளிர்வித்தது மழை
அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளான நேற்று நெல்லையில் மாறுபட்ட வானிலை காணப்பட்டது. காலையில் வெயில் சுட்டெரித்தது. ஆனால், மாலையில் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
நெல்லை:
தமிழகத்தில் நேற்று `அக்னி நட்சத்திரம்’ என்ற கத்திரி வெயில் தொடங்கியது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. காலை முதல் மாலை 3 மணி வரை இந்த மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுத்தது. மக்கள் சாலைகளில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேலும், அனல் காற்றும் வீசியது. சுட்டெரித்த வெயில் காரணமாக நெல்லை மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் பதநீர், இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர், கம்பு-ராகி கூழ் போன்றவற்றை மக்கள் விரும்பி வாங்கி சாப்பிட்டனர். இதனால் அவற்றின் விற்பனை அமோகமாக இருந்தது.
சாலைகளில் ஆங்காங்கே வெயிலின் தாக்கத்தால் கானல் நீர் காணப்பட்டது. மேலும், மண்டையை பிளந்த வெயில் காரணமாக மக்கள் பகல் நேர பயணத்தை தவிர்த்தனர். இதனால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. மேலும், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இல்லை. நெல்லைக்கு பகல் நேரத்தில் வந்த ரெயில்களில் ஏற மக்கள் அதிக ஆர்வம் காட்டாததால் ரெயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
மாலை 3 மணிக்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் திடீரென மழை பெய்ய தொடங்கியது. நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், மேலப்பாளையம், பாளையங்கோட்டை, சாந்திநகர், தச்சநல்லூர், டவுன், கொண்டாநகரம், சுத்தமல்லி, பேட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்று, இடி-மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் 45 நிமிடம் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது.
நெல்லை நகரத்தை தவிர மற்ற சில இடங்களிலும் சாரல் மழை தூறிக்கொண்டிருந்தது. இந்த மழை நீண்ட நேரம் நீடித்தது.
காலையில் சுட்டெரித்த வெயிலை தாங்க முடியாமல் தவித்த மக்கள், மாலையில் மழை பெய்து குளிர்வித்த சூழலால் மகிழ்ச்சி அடைந்தனர். அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல்நாளில், மாறுபட்ட சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.