கர்நாடகத்தில் புதிதாக 148 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 148 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-05-04 20:14 GMT
பெங்களூரு: கர்நாடகத்தில் புதிதாக 148 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

148 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் நேற்று 8,037 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் புதிதாக 148 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 142 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 1.84 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 162 பேர் குணம் அடைந்தனர். இதில் பெங்களூருவில் குணமானவர்களின் எண்ணிக்கை 150 ஆகும். மருத்துவ சிகிச்சையில் 1,801 பேர் உள்ளனர். இதில் பெங்களூருவில் மட்டும் 1,720 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100 என்ற அளவில் ஏற்பட்டு வந்தது. அது நேற்று திடீரென அதிகரித்து 150-ஐ நெருங்கியுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் பாதிப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரிசோதனைகள்

கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி கடந்த வாரம் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அன்றைய தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கர்நாடகத்தில் தினசரி பரிசோதனைகளின் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று கூறினார். ஆனால் இதுவரை அது இன்னும் 10 ஆயிரத்தையே தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்