சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு நியமன பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பணி இடமாற்றம்
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக நியமன பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம், சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி தகவல்களை பெற்றனர்.
பெங்களூரு: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக நியமன பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம், சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி தகவல்களை பெற்றனர்.
போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு
கர்நாடகத்தில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ்காரர்கள், பா.ஜனதா, காங்கிரஸ் பிரமுகர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, போலீஸ் நியமன பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த அம்ரித் பவுல் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அத்துடன் போலீஸ் நியமன பிரிவு அலுவலகத்தில் சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். இதற்கிடையில், போலீஸ் நியமன பிரிவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் சாந்தராஜிக்கும், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பணி இடமாற்றம்
இந்த நிலையில், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தராஜ் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் நியமன பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சாந்தராஜ், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு (பெங்களூரு) துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து சாந்தராஜிடம், சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பணி இடமாற்றம் செய்யப்பட்டதும், சாந்தராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி முறைகேடு சம்பந்தமாக தகவல்களை பெற்றிருப்பதாகவும், அதன்பிறகு அவரை போலீசார் அனுப்பி வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கூடுதல் டி.ஜி.பி.யை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டும் பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.