சென்னை மின்வாரிய பெண் அதிகாரி, குழந்தையுடன் சாவு
கொட்டாம்பட்டி அருகே மாடு குறுக்கே வந்ததால் கார் கவிழ்ந்த விபத்தில் சென்னையை சேர்ந்த மின்வாரிய பெண் அதிகாரி, குழந்தையுடன் பலியானார்.;
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே மாடு குறுக்கே வந்ததால் கார் கவிழ்ந்த விபத்தில் சென்னையை சேர்ந்த மின்வாரிய பெண் அதிகாரி, குழந்தையுடன் பலியானார்.
மின்வாரிய பெண் அதிகாரி
மதுரை பகுதியை சேர்ந்தவர் அஜீத்பாபு. இவருக்கும் ஷர்மிளா (31) என்பவருக்கும் திருமணமாகி நயோமிகா (5) யுவந்திகா (1) 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். ஷர்மிளா சென்னை படூரில் மின்வாரிய செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார். அவரது கணவர் அஜீத்பாபு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் ஷர்மிளா, அவருடைய தம்பி சாம்கணேஷ் (27), 2 குழந்தைகளுடன் மதுரைக்கு வந்தனர். பின்னர் மீண்டும் சென்னைக்கு நேற்று மாலை காரில் திரும்பி உள்ளனர். காரை சாம்கணேஷ் ஓட்டி சென்றார்.
கார் கவிழ்ந்து 2 பேர் பலி
மதுரை அருகே உள்ள கொட்டாம்பட்டியை அடுத்த பள்ளபட்டி பகுதியில் நான்கு வழி சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்தது.
இதனால் மாட்டின் மீது மோதாமல் இருக்க காரை சாம்கணேஷ் திடீரென பிரேக் பிடித்தார். இதில் நிலை தடுமாறிய கார் சாலையை விட்டு விலகி வயல்வெளியில் பாய்ந்து தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஷர்மிளா துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். காரில் பயணம் செய்த மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.விபத்து குறித்து அறிந்ததும் கொட்டாம்பட்டி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தை யுவந்திகா(1) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. படுகாயம் அடைந்த மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
------