திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் எரிவாயு உரம் தயாரிப்பு கூடம்

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் எரிவாயு தயாரிப்பு கூடத்தை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

Update: 2022-05-04 19:47 GMT
காரைக்குடி, 
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் எரிவாயு தயாரிப்பு கூடத்தை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
எரிவாயு உற்பத்தி
காரைக்குடி நகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ரூ78.50 லட்சம் மதிப்பீட்டில் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவு பொருட்களை கொண்டு மின்சாரம், உரம் மற்றும் எரிவாயு உற்பத்தி கூடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. 
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். காரைக்குடி நகர் மன்ற தலைவர் முத்துத்துரை முன்னிலை வகித்தார், ஆணையாளர் லெட்சுமணன் வரவேற்றார். அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் உற்பத்திக் கூடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:- நவீன தொழில்நுட்பத்தில், காரைக்குடி நகராட்சி பகுதியின் பயன்பாடற்ற குப்பைகள் மூலம் மக்களுக்கு அத்தியாவசிய தேவையான எரிவாயு, மின்சாரம் மற்றும் விவசாயிகளுக்கு பயன் உள்ள வகையி லான உரம் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 
மின்சாரம்
மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப கூடுதலாக பல்வேறு நவீன உத்திகளை கையாள வேண்டிய நிலை தற்போது உள்ளது. அந்த வகையில் காரைக்குடி நகராட்சியில் தினந் தோறும் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் காய்கறி பழங்களின் கழிவுகள், வீணாகும் உணவுப்பொருட்கள், மீன் கழிவுகள் இவற்றில் இருந்து மீத்தேன் வாயு உற்பத்தி செய்து அதில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
இதுதவிர நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் லிட்டர் திட மற்றும் திரவ உரம் தயாரிக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பாடற்ற குப்பைகள் அப்புறப் படுத்தப்படும். அதை திடக்கழிவு மேலாண்மை மூலம் பயோ கியாஸ் தயாரித்து அதன் மூலம் மின்சாரம் தயாரித்து இவற்றில் இருந்து வெளிவரும் கழிவு பொருள் விவசாயத்திற்கு பயன்படும் நுண்ணுயிர் சத்தாக மாற்றப்படும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
விழிப்புணர்வு
இந்த திட்டம் மாவட்டத்தின் மேலும் சில பகுதிகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் மீட்பு பூங்கா மற்றும் இயற்கை உரங்கள் என எண்ணற்ற திட்டங்களை உருவாக்குவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பும், பொருளாதார ரீதியாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியும் முன்னேற்றமும் காண வழிவகையும் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சள் பை என்ற நோக்கில் இந்த மையத்தில் தயாரிக்கப்படும் அனைத்து உரப்பொருட்களை மஞ்சள் பையில் வழங்குவதற்கு முன்மாதிரியாக மாதிரி உரப் பொருட்களை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மஞ்சள் பையில் விவசாயிகளுக்கு வழங்கினார்.
முன்னாள் அமைச்சர் தென்னவன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அணி முன்னாள் துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர். ஆனந்த், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப. சின்னத்துரை நகர்மன்ற துணைத் தலைவர் குணசேகரன், காரை சுரேஷ் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்