கரூர் மாவட்டத்தில் இன்று நடக்கும் பிளஸ்-2 தேர்வை 11,193 மாணவர்கள் எழுதுகின்றனர்
கரூர் மாவட்டத்தில் இன்று நடக்கும் பிளஸ்-2 தேர்வை 11,193 மாணவர்கள் எழுதுகின்றனர். 42 மையங்களில் தேர்வு நடக்கிறது.
கரூர்,
ஆன்லைன் வகுப்புகள்
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர், பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த முடியாத காரணத்தால் ஆன்லைன் வகுப்புகள் வழியாகவே பாடங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் படிப்படியாக தொடங்கப்பட்டது. பள்ளி வேலை நாட்கள் குறைவாக இருந்ததால், சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெற்றன. மாதாந்திர தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டன. திருப்புதல் தேர்வும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
பொதுத்தேர்வு
இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 30-ந்தேதி வரை நடக்கிறது. அதேபோல பிளஸ்-1 பொதுத்தேர்வு வருகிற 10-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி கரூர் மாவட்டத்தில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் 42 தேர்வு மையங்களிலும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 59 தேர்வு மையங்களிலும் நடைபெறுகிறது.
11 ஆயிரத்து 193 பேர்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 6 ஆயிரத்து 735 மாணவர்களும், 6 ஆயிரத்து 401 மாணவிகளும் என மொத்தம் 13 ஆயிரத்து 136 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில் சிறப்பு சலுகை பெற்ற மாணவ, மாணவிகள் 135 பேர் கலந்து கொள்கின்றனர். பிளஸ்-1 பொதுத்தேர்வில் 6 ஆயிரத்து 171 மாணவர்களும், 6 ஆயிரத்து 110 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 281 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இதில் சிறப்பு சலுகை பெற்ற மாணவ, மாணவிகள் 112 பேர் கலந்து கொள்கின்றனர். பிளஸ்-2 பொதுத்தேர்வில் 5 ஆயிரத்து 893 மாணவர்களும், 5 ஆயிரத்து 300 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 193 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில் சிறப்பு சலுகை பெற்ற மாணவ, மாணவிகள் 51 பேர் கலந்து கொள்கின்றனர்.
பறக்கும் படை
பொதுத்தேர்விற்கு மாவட்ட அளவில் கண்காணிப்பதற்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளை கண்காணிக்க 130 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படையும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளை கண்காணிக்க 135 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும்படையும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வை முன்னிட்டு நேற்று தேர்வு மையங்களில் மேஜைகள் வரிசைப்படுத்தும் பணி, மேஜைகளில் மாணவர்களின் பதிவு எண் ஒட்டும் பணி, வகுப்பறையில் தேர்வு எழுதும் மாணவர்களின் பதிவு எண் விவரங்கள் ஒட்டும் பணி உள்ளிட்ட முன்னேற்பாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்றது.