கேரளாவுக்கு கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டெம்போ டிரைவர் கைது

களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து டெம்போ டிரைவரை கைது செய்தனர்.

Update: 2022-05-04 18:53 GMT
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து டெம்போ டிரைவரை கைது செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி, மானிய மண்எண்ணெய் ஆகியவை கேரளாவுக்கு கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. அதுபோல குமரி மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி போன்றவை கடத்தப்படுகிறது. இதனை தடுக்க குமரி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் வருவாய் அதிகாரிகளும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்தநிலையில், களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் சிந்தாமணி மற்றும் போலீசார் நேற்று குழித்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
பறிமுதல்
அதைத்தொடர்ந்து டெம்போவை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்திய போது, பெருசிலம்பு வேளிமலை பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் (வயது 25) என்பதும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் காட்டாக்கடைக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து தினேஷ்குமாரை கைது செய்த போலீசார் 8 டன் ரேஷன் அரிசியையும், டெம்போவையும் பறிமுதல் செய்தனர். 
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு 8 டன் அரிசியை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை பாராட்டினார். மேலும் பிடிபட்ட டெம்போ மற்றும் ரேஷன் அரிசி ஆகியவை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்