வனபத்ர காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு; காளைகள் முட்டியதில் 38 பேர் காயம்

வனபத்ர காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 38 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-05-04 18:47 GMT
கீழப்பழுவூர், 
வனபத்ர காளியம்மன் கோவில்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேலப்பழுவூர் ஊராட்சியை சேர்ந்த கீழையூர் கிராமத்தில் வனபத்ர காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வீரபிள்ளை ஏரி திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டு தடுப்பு கட்டைகள் போடப்பட்டிருந்தன. மேலும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. அதன்பின்னர் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை மாடுபிடி வீரர்கள் எடுத்துக்கொண்டனர்.
இதையடுத்து, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, அரியலூர் ஆர்.டி.ஓ. ஏழுமலை ஆகியோர் காலை 8  மணியளவில் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 
சீறிப்பாய்ந்த காளைகள்
முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டன. அதை யாரும் பிடிக்கவில்லை. இதைதொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
சில காளைகள் வீரர்களை நெருங்க விடாமல் களத்தில் நின்று வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இந்த ஜல்லிக்கட்டில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 694 காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன. இதில் 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். 
38 பேர் காயம்
இப்போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், மின்விசிறி, மிக்சி,  பாத்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. 
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற வீரர்கள், பார்வையாளர்கள் என 38 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் அருங்கால் கள்ளகுடி கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் (வயது 45),  ஜெயங்கொண்டத்தை சேர்ந்த தாமஸ் ராஜ் (19) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 
ஜல்லிக்கட்டை மேலப்பழுவூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர்.  போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன், கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்