ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடைபெற இருந்த காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு சமாதான கூட்டத்தில் முடிவு

காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2022-05-04 18:38 GMT
பொன்னமராவதி:
பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல் ஊராட்சியில் பணிபுரியும் 12 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு கடந்த 38 மாதங்களாக சம்பளம் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பாக தொழிலாளர்களின் குடும்பத்துடன் கஞ்சி காய்ச்சும் போராட்டம், தொடர் காத்திருப்பு போராட்டம் ஆலவயல் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெற இருந்தது. இந்நிலையில், நேற்று பொன்னமராவதி தாசில்தாரும், வட்ட நிர்வாக நடுவருமான ஜெயபாரதி முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் 12 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு தற்காலிக ஊதியம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நிதியறிக்கையின் கீழ் 38 மாத நிலுவை தொகை வழங்கப்படும். நீர்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து அதற்கான தொகையை மேற்கண்ட  ஆபரேட்டர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.சந்திரா உறுதியளித்தார். இதைதொடர்ந்து இன்று நடைபெற இருந்த  தொடர்காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. சமாதானக் கூட்டத்தில் தொழிலாளர்கள் தரப்பில் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.முகமதலி ஜின்னா, மாவட்ட துணை தலைவர் யாசின், ஊராட்சி செயலர் பஞ்சவர்ணம், சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், அரசு தரப்பில் வட்டார வளர்ச்சி அலுவலர்,  பொன்னமராவதி போலீசார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்