ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-04 18:37 GMT
காரியாபட்டி, 
காரியாபட்டி அருகே ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
குடிநீர் இணைப்பு 
காரியாபட்டி ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளுக்கு மட்டும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் 5 ஊராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வீடுகள் தோறும் குடிநீர் பைப் இணைக்கப்பட்டு வந்துள்ளது.
அதில் மக்களின் பங்களிப்பு தொகை வழங்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளன. ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் குடிநீர் இணைப்புக்கு வழங்க வேண்டிய பங்களிப்பு தொகையை கேட்டுள்ளனர். குடிநீர் இணைப்புக்கான மக்கள் பங்களிப்பு தொகை தரவில்லை என்றால் உங்களுக்கு 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை வழங்க மாட்டோம் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 
முற்றுகை 
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எங்களைக் கேட்காமல் எங்கள் வீட்டில் பைப் லைன் பதித்து அதற்கு கட்டண தொகை கேட்பதாகவும், 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை தரமறுப்பதாகவும் கூறி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் வலுக்கலொட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து மல்லாங்கிணறு போலீசார் மற்றும் காரியாபட்டி ஊராட்சி யூனியன் அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்