பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டத்தில் 2,282 பயனாளிகள் தேர்வு
பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டத்தில் 2,282 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கரூர்,
கிராம புறங்களில் வீடுகள் இல்லா ஏழை, எளிய குடும்பங்களுக்கு பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவ்வாறு கட்டப்படும் வீடுகள் பாதுகாப்பான சிமெண்டு கான்கிரீட் கூரை அமைப்பதற்காக தமிழக அரசால் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம்- கூடுதலாக சேர்த்து வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியம், பாப்பையம்பாடி, வரவனை, ஆதனூர் மற்றும் தரகம்பட்டி ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் முடிவுற்ற மற்றும் நடைபெற்று வருகின்ற சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகள், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள், அனைத்து கிராமம் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் என பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:- பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் (ஊரகம்) கீழ் கட்டப்படும் வீடு 269 சதுர அடிக்கு குறைவில்லாமல் ஒரு தங்கும் அறை, ஒரு படுக்கையறை, சமையலறை மற்றும் முன்புறம் ஒரு தாழ்வாரம் ஆகியவற்றை கொண்டதாகும். மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் முறையே 60 : 40 என்ற விகிதத்தில் இத்திட்டத்திற்கென ரூ.1 லட்த்து 20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இருப்பினும் பாதுகாப்பான சிமெண்டு கான்கிரீட் கூரை அமைப்பதற்காக தமிழக அரசால் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் சேர்த்து வழங்கப்படுகிறது. மேலும் பயனாளிகளுக்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் உழைப்பிற்கான ஊதிய ஊக்கத் தொகையாக ரூ.25,290-ம் மற்றும் கழிப்பறைக்காக ரூ.12 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் ஒரு வீட்டிற்கான அலகு தொகை ரூ.2 லட்ச்து 77 ஆயிரத்து 290- ஆகும். 2021-2022-ம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 248 பேருக்கும், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் 62 பேருக்கும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 179 பேருக்கும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 151 பேருக்கும், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் 136 பேருக்கும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 521 பேருக்கும், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 721 பேருக்கும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 264 பேருக்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 282 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.