தொட்டியம்பட்டி, கட்டக்குடி கண்மாய்களில் மீன்பிடி திருவிழா

தொட்டியம்பட்டி, கட்டக்குடி கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

Update: 2022-05-04 18:30 GMT
பொன்னமராவதி:
மீன்பிடி திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தொட்டியம்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ.நகர் பின்புறம் உள்ள தாழ்பாய் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையடுத்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்மாயில் குவிந்தனர். பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜா அம்பலகாரர் தாழ்பாய் கண்மாய் கரையில் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வெள்ளை துண்டு வீசினார். 
பின்னர் கட்டையாண்டிபட்டி, தொட்டியம்பட்டி, பிடாரம்பட்டி, ஏனாதி, ஜீவா நகர், இந்திரா நகர், பி.உசிலம்பட்டி, பரியாமருதுபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்றிணைந்து கண்மாயில் இறங்கி ஊத்தா, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி மீன் பிடித்தனர். 
அதிக அளவில் மீன்கள்
பொதுமக்களின் வலையில் கெண்டை, கெளுத்தி, கட்லா, குரவை, விரால், ஜிலேப்பி மீன் உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு மீன்கள் சிக்கியது. இந்த மீன்பிடி திருவிழாவில் தான் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களில் அதிக அளவில் மீன் கிடைத்தது. 
கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு அதிக அளவில் 5 கிலோ கட்லா, விரால் 3 கிலோ என பெரிய வகை மீன்கள் சிக்கியது. மீன்களை பிடித்த மகிழ்ச்சியில் பொதுமக்கள் மீன்களை எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டனர். 
அன்னவாசல் 
இலுப்பூர் அருகே கட்டக்குடி பெரியகண்மாய் கரையில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இதையடுத்து பெரியகண்மாய் கரையில் மீன்பிடி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக பிடாரி அம்மனுக்கு பொங்கலிட்டு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டை எடுத்து வீசிய உடன், கண்மாய் கரையில் கூடியிருந்த திரளான பொதுமக்கள் தங்கள் கொண்டுவந்த கச்சா, தூரி, வலை என அவற்றை கண்மாயில் வீசி ஒவ்வொருவரும் மீன் பிடித்தனர்.
இந்த மீன்பிடி திருவிழாவில் நாட்டுவகை மீன்களான குரவை, ஜிலேப்பி, அயிரை, கட்லா, கெண்டை கெளுத்தி, விரால் ஆகிய மீன்கள் பொதுமக்களுக்கு கிடைத்தது. பின்னர் பிடித்த மீன்களை பொதுமக்கள் வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்