தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-05-04 18:17 GMT
கரூர்
ஊருக்குள் பஸ் வந்து செல்ல நடவடிக்கை 
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் இருந்து கரூருக்கு புறப்பட்டு வரும் அனைத்து பஸ்களும் வேலாயுதம்பாளையம் ஊருக்குள் வந்து செல்லும். ஆனால் கடந்த சில நாட்களாக எந்த பஸ்களும் வேலாயுதம்பாளையம் ஊருக்குள் வராமல் புறவழி சாலை வழியாக கரூருக்கு செல்கிறது. இதனால் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று புறவழிச்சாலையில் பஸ் ஏறி செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கரூருக்கு செல்லும் பஸ்கள் வேலாயுதம்பாளையம் ஊருக்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மித்திரன் ராதா, வேலாயுதம்பாளையம், கரூர்.

தெருநாய்களை பிடிக்க வேண்டுகோள்
கரூர் நகரப்பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நாய்கள் சாலையின் மையப்பகுதியில் படுத்து கொள்வதால், மோட்டார் சைக்கிள்களில் செல்வோர்  கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்வோரை நாய்கள் துரத்தி சென்று கடிக்கிறது.  சாலைகளில் நாய்கள் திடீரென்று குறுக்கும், நெடுக்குமாக ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கரூர்.

மேலும் செய்திகள்