போலீஸ் ஏட்டாக பணிபுரிந்த 35 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பொறுப்பேற்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்த 35 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
பெரம்பலூர்,
தமிழக அரசின் ஆணைப்படி கடந்த 1997-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் 2-ம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 25 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்து போலீஸ் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரிந்து 25 ஆண்டுகள் எவ்வித தண்டனை மற்றும் காவல்துறையின் ஒழுங்கு நடவடிக்கைக்குட்படாத 35 போலீஸ் ஏட்டுகள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். அவ்வாறு, பதவி உயர்வு பெற்றவர்களை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி நேற்று வரவழைத்து பதவி உயர்வு பெற்றதற்கு வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்து வரும் காலங்களில் சிறப்பாக பணிபுரியுமாறு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஆரோக்கிய பிரகாசம், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.