தர்மபுரியில் எல்ஐசி ஊழியர்கள் 2 மணி நேரம் வேலை நிறுத்தம்
எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரியில் ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்து 2 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தர்மபுரி:
எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரியில் ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்து 2 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் நேற்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி எல்.ஐ.சி. அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் வெளிநடப்பு செய்து 2 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு எல்.ஐ.சி. ஊழியர் சங்க கிளை தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கோட்ட இணைசெயலாளர் மாதேஸ்வரன், கிளை செயலாளர் சந்திரமவுலி, பொருளாளர் நடராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
குறைத்து மதிப்பீடு
பொது காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. ரூ.38 லட்சம் கோடி சொத்து மதிப்பை பெற்று 40 கோடி பாலிசிதாரர்களுடன் செயல்பட்டு வரும் நிலையில் இந்த நிறுவனத்தின் பங்குகளை பங்குச்சந்தையில் வெளியிடும் நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். எல்.ஐ.சி.யின் பங்குகளை குறைத்து மதிப்பிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை மறைமுகமாக பங்கு விற்பனையில் ஈடுபடுத்தி எல்.ஐ.சி. நிறுவனத்தை சூறையாடும் முயற்சியை கைவிட வேண்டும்.
எல்.ஐ.சி. நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை மேற்கொள்ளக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஊழியர்கள் கலந்துகொண்டனா். இந்த போராட்டம் காரணமாக நேற்று பகலில் 2 மணி நேரம் எல்.ஐ.சி. அலுவலகம் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடியது. அலுவலகத்தில் வழக்கமான பணிகள் பாதிக்கபட்டன.