நாமக்கல்லில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

நாமக்கல்லில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-05-04 18:01 GMT
நாமக்கல்:
நாமக்கல் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் மற்றும் வட்டார அளவிலான சுகாதார விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், பள்ளி இளம் சிறார் நலத்திட்டம், உணவு பாதுகாப்புத்துறை, குடும்ப நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தாய் சேய் நலம், நோய்த்தடுப்புத்துறை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் மூலமாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைகளின் சிறப்பு மருத்துவ வல்லுனர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நோய்கள் குறித்த பரிசோதனைகளை செய்தனர். தமிழக அரசின் சித்த மருத்துவ துறையின் மூலம் மூலிகை கண்காட்சியும் அமைக்கப்பட்டு இருந்தது.
இவற்றை பார்வையிட்ட ராஜேஷ்குமார் எம்.பி. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களையும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகங்களையும் வழங்கினார். முகாமில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, நகர்மன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், கிருஷ்ணபிரியா, துணை இயக்குனர் (காசநோய்) வாசுதேவன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கண்ணன், உதவி இயக்குனர் நக்கீரன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்