நாமக்கல்லில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்:
தேர்தல் வாக்குறுதிப்படி நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலேயே 7 ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்த முறையில் பணி செய்யும் செவிலியர்களை தி.மு.க. அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதர அரசு ஊழியர்களை போன்று மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மும்தாஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் இளவேந்தன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத், கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.