எருமப்பட்டி அருகே சிறுமி கடத்தல்: பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஏற்பட்ட முன்விரோதமே காரணம்-போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி பேட்டி

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஏற்பட்ட முன்விரோதமே எருமப்பட்டி அருகே சிறுமி கடத்தப்பட முக்கிய காரணம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கூறினார்.

Update: 2022-05-04 18:00 GMT
நாமக்கல்:
சிறுமி கடத்தல்
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள காளிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). லாரி டிரைவர். இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு ஜோனின் (14) என்ற மகனும், மவுலீசா (11) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 1-ந் தேதி கவுசல்யா தனது குழந்தைகளுடன் மொட்டை மாடியில் தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் கவுசல்யா மற்றும் அவரது மகனை கத்தியை காட்டி மிரட்டி கை, கால்களை கட்டிலுடன் சேர்த்து கட்டிவிட்டு சிறுமி மவுலீசாவை கடத்தினர். மேலும் கவுசல்யா அணிந்து இருந்த தங்கத்தோடு, வெள்ளி கொலுசு, வீட்டில் இருந்த ரூ.3 ஆயிரம் ஆகியவற்றையும் கொள்ளை அடித்து சென்று விட்டனர். சிறுமியை விடுவிக்க ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டினர்.
மீட்பு
இது தொடர்பாக எருமப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் 7 தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்தனர். இதை அறிந்த மர்ம நபர்கள் 2-ந் தேதி நள்ளிரவில் அலங்காநத்தத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சிறுமியை விட்டுவிட்டு சென்றனர். 
இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், அவரது மனைவி பொன்மணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்கத்தோடு, கொலுசு, பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.
பாராட்டு சான்றிதழ்
இந்தநிலையில் கடத்தல் வழக்கில் துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்தில் எதிரிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு நேற்று சான்றிதழ் வழங்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி பாராட்டு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறுமி கடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும், மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். 7 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினோம். இதனால் 24 மணி நேரத்தில் சிறுமி மீட்கப்பட்டார்.
ரூ.2 லட்சம் கொடுக்கல், வாங்கலில் சரவணன் குடும்பத்திற்கும், கைதான மணிகண்டன் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. எனவே சரவணன் குடும்பத்தினரை பழிவாங்க மணிகண்டன் சிறுமியை கடத்தி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் மஜாஜ் சென்டரிலும் சோதனை நடத்தி விதிமுறை மீறல் இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும்.
குட்கா பறிமுதல்
நாமக்கல் அருகே விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் இருந்து 480 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். மாவட்டம் முழுவதும் போலீசாருக்கு வாரம் ஒருநாள் விடுமுறை சரியாக வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சேகர், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுரேஷ், சங்கர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்