சபாலே ரெயில் நிலையம் அருகே- மகளுடன் விதவை பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
சபாலே ரெயில் நிலையம் அருகே, 7 வயது மகளுடன் விதவை பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வசாய்,
சபாலே ரெயில் நிலையம் அருகே, 7 வயது மகளுடன் விதவை பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடல்கள் மீட்பு
பால்கர் மாவட்டம் சபாலே ரெயில் நிலையம் அருகே இரு சக்கர வாகன நிறுத்தம் உள்ளது. அங்கு ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணி அளவில் தனது வாகனத்தை எடுக்க வந்தபோது, தண்டவாளம் அருகே ஒரு பெண்ணும், சிறுமியும் உடல் சிதறி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதன்பேரில், ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். அப்போது உடல்கள் அருகே கிடந்த ஆதார் கார்டு, செல்போனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் தற்கொலை செய்து கொண்டது தாராப்பூர் போபரானை சேர்ந்த திருப்தி அரேக்கர் (வயது 30) மற்றும் அவரது 7 வயதுடைய மகள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், திருப்தி அரேக்கரின் கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தனது 7 வயது மகள் மற்றும் தந்தையுடன் தாராப்பூர் போபரானை பகுதியில் வசித்து வந்தார். இதற்கிடையில், நேற்று இரவு திருப்தி அரேக்கர் தனது மகளுடன், மும்பை நோக்கி சென்ற சவுராஷ்டிரா எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்தி அரேக்கர் தனது மகளுடன் தற்கொலை செய்ய காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.