ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண் குத்திக்கொலை

கூடலூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-05-04 17:33 GMT
கூடலூர்: 

 கூலித்தொழிலாளி 
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியை சேர்ந்தவர் லட்சுமணன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பாக்கியம். லட்சுமணன் தனது குடும்பத்துடன் தேனி மாவட்டம் கூடலூர் அருகே கருணாநிதி காலனியை அடுத்த தனியார் தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். 
இவர்களது மகள் நந்தினி (வயது 26). இவருக்கு, முதல் திருமணமாகி கணவரை பிரிந்தநிலையில், 2-வதாக ஒட்டன்சத்திரம் அருகே பாச்சலூரை சேர்ந்த தேதீஸ்வரன் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

கத்தியால் குத்திக்கொலை   
இதற்கிடையே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நந்தினி, கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து கூடலூரில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று  இரவு தோட்டத்து வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக நந்தினி வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.

 நீண்ட நேரமானதால் லட்சுமணன் அவரை தேடி சென்றார். அப்போது தோட்டத்தில் நந்தினி கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்து லட்சுமணன் அதிர்ச்சியில் அலறினார். உடனே பக்கத்து தோட்ட தொழிலாளி முத்துசாமி (26) அங்கு ஓடி வந்தார். பின்னர் லட்சுமணனும், அவரும் சேர்ந்து நந்தினியை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நந்தினி பரிதாபமாக இறந்தார். 

போலீஸ் தீவிர விசாரணை 
இதுகுறித்து தகவலறிந்த கூடலூர் தெற்கு ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று நந்தினியின் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். 
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் நந்தினியின் செல்போனை கைப்பற்றி துப்புதுலக்க போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து அவருடைய வீட்டுக்கு சென்று செல்போனை கைப்பற்றினர்.

ஆசைக்கு இணங்க மறுப்பு
அதில் நந்தினி யார், யாரிடம் பேசி உள்ளார் என்பது குறித்து ஆய்வு செய்தனர். அப்ேபாது பக்கத்து தோட்ட தொழிலாளியான முத்துசாமியிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் நந்தினியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். 

அதில் தோட்டத்தில் வேலை பார்க்கும்போது, பக்கத்து தோட்டத்தில் இருந்த நந்தினியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. செல்போனில் அவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று தோட்டத்து வீட்டில் இருந்து நந்தினி வெளியே வந்துள்ளார். அப்போது அவரிடம் செல்போனில் முத்துசாமி பேசினார். பின்னர் அங்கு சென்று நந்தினியை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். அவர் மறுத்ததால் முத்துசாமி ஆத்திரம் அடைந்து கத்தியால் நந்தினியை குத்திக்கொலை செய்ததாக வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்