தமிழகம் முழுவதும் உள்ள ஊர்க்காவல் படையினரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் முதல் அமைச்சருக்கு கோரிக்கை மனு
தமிழகம் முழுவதும் உள்ள ஊர்க்காவல் படையினரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் முதல் அமைச்சருக்கு கோரிக்கை மனு
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட ஊர்க்காவல் படையினர், தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் காவல் துறையோடு இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஒரு நாளைக்கு ரூ.560 வீதம் மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டு ரூ.2,800 மாத ஊதியமாக கிடைத்து வருகிறது. இந்த குறைந்த ஊதியத்தை வைத்து எங்கள் குடும்பத்தை வழிநடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். இதில் பணிபுரியும் அதிகம் பேர் ஆதிதிராவிடர்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஆவர். மேலும் வருமானம் குறைவால் திருமணம் செய்துகொள்வதற்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருகிறோம். குறைந்த ஊதியம் என்பதால் மன உளைச்சல் மற்றும் உடல்நலக்குறைவால் பலர் மரணமடைந்துள்ளனர். தமிழகத்தை தவிர பக்கத்து மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஊர்க்காவல் படையினரை பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு அளித்துள்ளனர். எனவே தமிழகம் முழுவதும் உள்ள 16 ஆயிரம் ஊர்க்காவல் படையினரின் கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சர் ஏற்று எங்களுக்கு மாதம் முழுவதும் பணி வழங்கி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.