உறவுகள் துளிர் விட துடைப்பத்தால் அடித்து கொண்ட கிராம மக்கள்

ஆண்டிப்பட்டி அருகே நடந்த கோவில் திருவிழாவில், உறவுகள் துளிர் விட துடைப்பத்தால் கிராம மக்கள் அடித்து கொண்ட வினோத நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2022-05-04 17:24 GMT
ஆண்டிப்பட்டி: 

 
கோவில் திருவிழா
ஆண்டிப்பட்டி அருகே மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், சித்திரை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. 
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா, கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மொத்தம் 3 நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் 2 நாட்கள் பொங்கல் வழிபாடு, முளைப்பாரி, தீச்சட்டி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. 

 உறவுகள் துளிர் விட...
விழாவின் 3-வது நாள் கிராம மக்கள் ஒருவருக்கொருவர் துடைப்பத்தால் அடித்து கொள்ளும் வினோத நிகழ்ச்சி நடந்தது. அதில் அடிப்பதற்கு முன்பாக துடைப்பத்தை கழிவு நீரிலும், சகதியிலும் நனைத்துக் கொண்டு மாமன், மைத்துனர்கள் மீது ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி அடித்துக்கொண்டனர். 
மேலும் சிலர் சேற்றிலும், சகதியிலும் படுத்துக்கொண்டு தங்கள் உறவினர்களிடம் துடைப்பத்தால் அடிவாங்கிய காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர். 

துடைப்பத்தை கழிவு நீரில் நனைத்து தாக்கிக்கொள்வதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும் என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். மேலும் நீண்டநாள் பிரிந்து வாழும் உறவுகள் திருவிழாவின் போது துடைப்பத்தால் அடித்துக்கொள்வதால் அவர்களுக்கிடையே மீண்டும் உறவு துளிர்விடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்