பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இதையொட்டி தேர்வு மையங்களில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்தார்.
கோவை
பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இதையொட்டி தேர்வு மையங்களில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்தார்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 35,033 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 119 தேர்வு மையங்கள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர 2,047 தனித்தேர்வர்களும் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதற்காக 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க 193 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
இதேபோல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 41 ஆயிரத்து 811 மாணவமாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 141 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர 2,917 தனித்தேர்வர்களும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர் வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தேர்வு அறைகளில் உள்ள மேஜைகளில் மாணவர்களின் பதிவு எண் எழுதப்பட்டு உள்ளது. தேர்வு எழுத வரும் மாணவமாணவிகள் வாட்ச், பெல்ட்டு அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கல்வி அதிகாரி ஆய்வு
இந்த நிலையில் தேர்வு மையங்களில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அத்துடன் அங்கு மாணவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.
இதற்கிடையே, 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கும் இன்று தான் தேர்வு தொடங்குகிறது. இதில் 1 முதல் 5 வரை உள்ள மாணவர்களுக்கு காலையிலும், 6 முதல் 9 வரை உள்ள மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வு நடக்கிறது.