ஊட்டி மலைரெயில் பாதையில் மரங்கள் விழுந்தது
மேட்டுப்பாளையத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் ஊட்டி மலை ரெயில் பாதையில் மரங்கள் விழுந்தன. இதனால் ஊட்டி மலை ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.;
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் ஊட்டி மலை ரெயில் பாதையில் மரங்கள் விழுந்தன. இதனால் ஊட்டி மலை ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
மலைரெயில் பாதையில் விழுந்த மரங்கள்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம், கல்லாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
காற்றுடன் பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் பாதையில் காட்டூர் ரெயில்வே கேட் அருகே ராட்சத மரம் வேரோடு சாய்ந்து தண்டவாளத்தில் விழுந்தது. அதேபோல் கல்லாறு ரெயில்வே கேட் அருகிலும் மரம் சாய்ந்து ரெயில்பாதையில் விழுந்தது. இதன்காரணமாக ஊட்டி மலைரெயில் மேட்டுப்பாளையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
2 மணி நேரம் தாமதம்
இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ரெயில்பாதையில் கிடந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மரத்தை எந்திரம் மூலம் அறுத்தும், பொக்லைன் மூலமாகவும் அகற்றினர்.
இதையடுத்து ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட்டது. காலை 7.10 மணிக்கு புறப்பட வேண்டிய மலைரெயில் 2 மணி நேரம் தாமதமாக 9.10 மணிக்கு ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர்.