பாலியல் பலாத்கார வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கணேஷ் நாயக்கிற்கு ஜாமீன்- ஐகோர்ட்டு உத்தரவு
பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பா.ஜனதா எம்.எல்.ஏ. கணேஷ் நாயக்கிற்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை,
நவிமும்பையை சேர்ந்த பெண் ஒருவர் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரியும், ஐரோலி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கணேஷ் நாயக் மீது கடந்த மாதம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரில் தன்னுடன் கடந்த 27 ஆண்டாக திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்ததாகவும், கடந்த ஆண்டில் உறவை யாரிடமும் வெளிப்படுத்தாமல் இருக்க துப்பாக்கியை காட்டி தன்னை கணேஷ் நாயக் எம்.எல்.ஏ. மிரட்டியதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் துணை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் படி கணேஷ் நாயக் எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்ய சி.பி.டி. பேலாப்பூர் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை தொடர்ந்து அவர் மீது பாலியல் பலாத்காரம், ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கணேஷ் நாயக் எம்.எல்.ஏ. முன்ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அனுஜா பிரபு தேசாய் முன்னிலையில் நடந்து வந்தது. விசாரணை நிறைவில், ரூ.25 ஆயிரம் பிணை தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் அவரது துப்பாக்கியை ஒரு வாரத்திற்குள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.