பா.ஜ.க. மாவட்ட நிர்வாகி மீது தாக்குதல்
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பா.ஜ.க. மாவட்ட நிர்வாகியை தாக்கிய 2 ஆசிரியர்கள் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் தாசர்புரம் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் மகன் சுரேஷ்(வயது 35). இவர் பா.ஜனதா ஊடக பிரிவின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆசிரியர்களான பென்னி, விங்லர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் சவுந்தரராஜன் மகன் நீதிதாஸ் ஆகிய 3 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக தகராறு உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பென்னி, விங்லர் மற்றும் நீதிதாஸ் ஆகியோர் சேர்ந்து, சுரேசை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் பென்னி, விங்லர் மற்றும் கேபிள் ஆபரேட்டர் நீதிதாஸ் ஆகிய 3 பேர் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.