அரசு பதிவேட்டில் உயிரோடு இருக்கும் தந்தை இறந்து விட்டதாக பதிவு நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் மனு
அரசு பதிவேட்டில் உயிரோடு இருக்கும் தந்தை இறந்து விட்டதாக பதிவு நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் மனு
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கொணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்வெங்கடேசன் மகள் சிவரஞ்சினி(வயது 25). இவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் அளித்துள்ளமனுவில் கூறியிருப்பதாவது:-
கிராமசபை கூட்டம்
நான் பி.எஸ்சி. முடித்துவிட்டு செவிலியர் பயிற்சிபெற்று வருகிறேன். கடந்த 1-ந் தேதி எங்கள் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மயிலம் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீரம்மாள் மற்றும் ஊராட்சி தலைவர் சுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வைக்கப்பட்ட வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் எனது தந்தை வெங்கடேசன் இறந்து விட்டதாகவும், தாய் சரிதா விதவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எனது தந்தை உயிரோடு இருக்கிறார்.
ஒருதலை பட்சமாக
இதையடுத்து அந்த பட்டியலில் உள்ள தவறை திருத்தம் செய்யும்படி கூறினேன். அப்போது அங்கிருந்த கிராம முக்கியஸ்தர்கள் நீ எப்படி கேள்வி கேட்கலாம் என்று ஆபாசமாக திட்டினர். கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் இந்த சம்பவத்தை பார்த்தனர். பின்னர் இதுகுறித்து, மயிலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தபோது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். ஆகவே நான் கொடுத்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.