அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தத்துடன் சித்திரை வசந்த உற்சவம் தொடங்கியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது.
சித்திரை வசந்த உற்சவம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்திரை வசந்த உற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் நேற்று மாலை கோவிலில் பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் இந்த விழா நடைபெறும்.
இதனையொட்டி நேற்று மாலை சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் விநாயகர் சன்னதி முன்பு மங்கல வாத்தியங்கள் முழங்க பந்தக்கால் நடப்பட்டது.
நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள் பந்தக்காலிற்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பித்தனர். அப்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் குறைந்த அளவிலான பக்தர்களே இதில் கலந்து கொண்டனர். கொட்டும் மழையில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை விழாவையொட்டி அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும். மேலும் 3-ம் பிரகாரத்தில் மகிழ மரம் அருகில் பன்னீர் மண்டபத்தில் சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தீர்த்தவாரி
விழாவின் நிறைவாக வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பின்னர் இரவு 10 மணியளவில் கோவிலில் கொடிமரம் அருகே மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள், உபயதாரர்கள் செய்து உள்ளனர்.