சுற்றுச்சூழலுக்கு உதவும் வேளாண் காடுகள் வளர்ப்பு

சுற்றுச்சூழலுக்கு உதவும் வேளாண் காடுகள் வளர்ப்பு

Update: 2022-05-04 16:54 GMT
போடிப்பட்டி,
சுற்றுச்சூழலுக்கு உதவக்கூடிய வேளாண் காடுகள் வளர்ப்பு என்பது விவசாயிகளுக்கும் கைகொடுக்கக் கூடியதாக உள்ளது.
தரிசு நிலங்களிலும் வருமானம்
புவி வெப்பமயமாவதைத் தடுத்தல், மழை ஈர்ப்பு, பல்லுயிர் பெருக்கம் என்று மனிதர்களுக்கு உதவுவதில் மரங்களின் பங்கு பெருமளவு உள்ளது. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற குரல் நடைமுறைச் சிக்கல்களால் செயலிழந்து போய் விட்டது. சாலையோரங்களில் வளர்க்கப்பட்ட மரங்கள் பலவும் சாலை விரிவாக்கத்தால் வெட்டி வீழ்த்தப்பட்டு விட்டது. இருந்தாலும் அரசு மற்றும் தன்னார்வலர்கள் முயற்சியால் சமூகக்காடுகள் என்ற வகையில் பல இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மரம் வளர்ப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் தரிசு நிலங்களிலும் வருமானம் ஈட்டும் யுக்தியாக வேளாண் காடுகள் வளர்ப்பு உள்ளது.
இதுகுறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறியதாவது:-
விவசாயத் தொழிலில் தண்ணீர் தட்டுப்பாடு, ஆட்கள் பற்றாக்குறை, விளைபொருட்களுக்கு விலையில்லாத நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் பலரும் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம் என்பது லாபகரமான தொழிலாக இல்லை என்ற எண்ணத்தில் விவசாய பூமிகளை வீட்டு மனைகளாக மாற்றும் அவலமும் அரங்கேறி வருகிறது. இந்தநிலையில் குறைந்த நீரில் பெரிய அளவில் பராமரிப்பு தேவைப்படாமல் வருமானம் ஈட்டக்கூடியதாக வேளாண் காடுகள் வளர்ப்பு உள்ளது. இதன்படி தனிப்பயிராக மரப்பயிர்களை சாகுபடி செய்வது மட்டுமல்லாமல் வேலிப்பயிராகவும் வரப்புப்பயிராகவும் மரங்களை வளர்க்கலாம். இதன்மூலம் விவசாய நிலங்களில் பசுமைச் சூழலை உருவாக்குவதுடன் சுற்றுச் சூழலுக்கும் மிகப்பெரிய பங்களிப்பை விவசாயிகள் வழங்க முடியும்.
அதிக வருமானம்
கரும்பு, தென்னை, வாழை உள்ளிட்ட பணப் பயிர்கள் பட்டியலில் மரப்பயிர்களையும் இணைத்துக் கொள்ளலாம். வாகை, மகோகனி, செஞ்சந்தனம், ஈட்டி, குமிழ், சந்தனம், முள் இல்லா மூங்கில், சவுக்கு, மலைவேம்பு, தைலமரம் என பலவகையான மரங்களை வளர்த்து விவசாயிகள் பயனடையலாம்.இதுதவிர கடம்பு, தேக்கு, வேங்கை, பூவரசன் போன்ற நாட்டு வகை மரங்களையும் வளர்க்கலாம். மழையை நம்பி மானாவாரியிலும், இறவைப் பாசனத்திலும் மரப்பயிர்களை சாகுபடி செய்யலாம். மரப்பயிர் சாகுபடியில் முதல் சில ஆண்டுகளுக்கு தண்ணீர் பாய்ச்சியாக வேண்டிய நிலை உள்ளது.சொட்டுநீர்ப் பாசனம் மூலம் சீராக தண்ணீர் கிடைக்கச் செய்வதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.
புவி வெப்பமயமாவதைத் தடுப்பதில் மரங்களின் பங்கு பெருமளவு உள்ளது.மேலும் மண்ணில் விழும் இலை தழைகள் மூலம் மண்வளம் மேம்படுகிறது.வேளாண் காடுகள் வளர்ப்பு என்ற வகையில் குடிமங்கலம் பகுதியில் சவுக்கு சாகுபடியில் ஒருசில விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.வேலிப்பயிராக மட்டுமல்லாமல் தனிப்பயிராகவும் சவுக்கு சாகுபடி செய்துள்ளனர். இறவைப் பாசனத்தில் பண்ணைக்காடுகளில் சவுக்கு வளர்ப்பதன் மூலம் 4 ஆண்டுகளில் அறுவடை செய்ய முடியும்.மேலும் சவுக்கு மரத்தின் வேர்களில் காணப்படும் பிராங்கியா எனப்படும் பாக்டீரியா காற்றிலுள்ள நைட்ரஜனை நைட்ரேட் உப்புகளாக மாற்றி நிலத்தில் சேமிப்பதால் மண்வளம் மேம்படுகிறது.கட்டுமானப் பணிகள் சாரம் அமைக்கவும், விவசாயக் கருவிகள் செய்யவும், சிறுவீடுகளில் கூரை அமைக்கவும் மற்றும் காகித உற்பத்தியிலும் சவுக்கு மரங்கள் பயன்படுத்தப்படுகிறது. 
வருமானம்
விளைநிலத்தை வீணாக்கி, வீட்டு மனைகளாக்கி விற்று சம்பாதிக்கும் லாபத்தை விட அந்த நிலத்தில் மரம் வளர்த்து அதிக வருமானத்தைப் பெற முடியும்.எனவே தானியப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள் போன்றவற்றை சாகுபடி செய்ய முடியாத விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டு விடாமல் மரப்பயிர்கள் சாகுபடி மூலம் வருமானம் ஈட்டுவதுடன் சுற்றுச் சூழலுக்கும் உதவலாம்.
இவ்வாறு  அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்