ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துவோம்

பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று முறைகேடு செய்த ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் லட்சுமண் தெரிவித்தார்.;

Update: 2022-05-04 16:29 GMT
மைசூரு:

ஜப்தி செய்ய உத்தரவு

  மைசூருவில் காங்கிரஸ் செய்தியாளர் லட்சுமண் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
  பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வும், முன்னாள் மந்திரியான ரமேஷ் ஜார்கிகோளிக்கு சொந்தமாக சவுபாக்கிய லட்சுமி சுகர்ஸ் என்ற சர்க்கரை ஆலை உள்ளது. அவர் அந்த ஆலையை பயன்படுத்தி பல்வேறு வங்கிகளில் ரூ.400 கோடி கடன் பெற்றுள்ளார். இதில் யூனியன் வங்கி மற்றும் அரியானா கூட்டுறவு வங்கியும் அடங்கும். ஆனால் அவர் இதுவரை எந்த கடனையும் திருப்பி செலுத்தவில்லை.

  கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த நிறுவனம் வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டது. மேலும், அந்த நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்தையும் ஜப்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் ரமேஷ் ஜார்கிகோளி ஜப்தி நடவடிக்கைக்கு எதிராக தார்வார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவர் 50 சதவீத கடனை திருப்பி செலுத்த வேண்டும் என கடந்த 2019-ம் ஆண்டு அந்த கோர்ட்டு இடைக்கால தீர்ப்பு வழங்கியது.

1,000 ஏக்கர் நிலம்

  ஆனால் அவர் கடனை திருப்பி செலுத்தாமலும், ஜப்தி நடவடிக்கைகளை தடுத்து வருகிறார். அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 1,000 ஏக்கர் நிலத்தின் மதிப்பை குறைத்து காட்டினார். அதன் மொத்த மதிப்பு ரூ.850 கோடி இருக்கும். எனவே அவர் ரூ.600 கோடி அளவிற்கு முறைகேடு செய்துள்ளார்.

  இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் மாவட்டங்கள் முழுவதும் சென்று கூட்டம் நடத்தி மக்களுக்கு தெரியப்படுத்துவோம். மேலும், ஊழல் நிறைந்த பா.ஜனதாவினர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்