கயத்தாறு அருகே ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை

கயத்தாறு அருகே, ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-04 14:16 GMT
கயத்தாறு:
கயத்தாறு அருகே, ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஆட்டோ டிரைவர்
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் மேல தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருடைய மகன் துரைபாண்டி (வயது 35), ஆட்டோ டிரைவர். இவர் கோவில்பட்டி ஊரணி தெருவில் வசித்து வந்தார். இவருக்கு விஜயலட்சுமி (32) என்ற மனைவியும், மகாலட்சுமி (6), கீர்த்திகா (3) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
துரைபாண்டியின் நண்பர் ஆறுமுகபாண்டி உள்பட சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர். அதில், காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த சிலர் ரேஷன் அரிசியை வாங்கி திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருவதாக கூறி இருந்தனர்.
தாக்குதல்
நேற்று முன்தினம் காலை துரைபாண்டி தனது மனைவியிடம் பன்னீர்குளம் கோவிலுக்கு சென்று விட்டு, வேறு வேலைக்கும் போய் விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு புறப்பட்டார். அப்போது ஆறுமுகபாண்டி அவரை அழைத்துச் சென்றார்.
பின்னர் நண்பர்களுடன் தளவாய்புரம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் இருக்கும் மதுக்கடையில் மது அருந்தினர். மாலையில் அங்கு வந்த கும்பல் உருட்டுக்கட்டையால் துரைபாண்டியை அடித்துள்ளனர். இதில் துரைபாண்டி மயங்கி விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டது.
சாவு
தாக்குதலில் பலத்த காயம் அடைந்த துரைபாண்டி அந்த இடத்தில் கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணி திலீப் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
உயிருக்கு போராடிய துரைபாண்டியை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துரைபாண்டி இறந்தார்.
5 பேர் கைது
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்புலிங்கம் பட்டியை சேர்ந்த மகாராஜன், ராஜாராம், மனோஜ், சவலாப்பேரி ஜானகிராம், கோவில்பட்டி காந்திநகரைச் சின்னதுரை ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் சூப்பிரண்டு இளங்கோவன், மணியாச்சி துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சங்கர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்