காட்டுயானைகள் பாதுகாப்பாக கடந்து செல்ல 14 இடங்களில் வேகத்தடை
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை காட்டுயானைகள் பாதுகாப்பாக கடந்து செல்ல 14 இடங்களில் வேகத்தடை போடப்படுகிறது.;
குன்னூர்
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை காட்டுயானைகள் பாதுகாப்பாக கடந்து செல்ல 14 இடங்களில் வேகத்தடை போடப்படுகிறது. மேலும் எச்சரிக்கை பலகையும் அமைக்கப்படுகிறது.
விரிவாக்க பணி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வரை ஆங்கிலேயர் காலத்தில் மலையை குடைந்து சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி காணப்படுகிறது. இங்கு வாழ்ந்து வரும் காட்டுயானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அலையும்போது, அடிக்கடி குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை கடந்து வருகின்றன. இதற்கிடையில் அந்த சாலையில் விரிவாக்க பணி மற்றும் ரெயில் பாதையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக யானை வழித்தடம் மறிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
நீதிபதிகள் குழு ஆய்வு
இதைத்தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து, அந்த யானை வழித்தட பிரச்சினை தொடர்பாக வழக்கு எடுத்தது. அதன்பின்னர் கடந்த மாதம் நீதிபதிகள் குழு, குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஆய்வு செய்தனர். அதில், குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே 2 இடங்களில் யானை வழித்தடம் உள்ளது என்றும், 4 இடங்களில் சாலையை கடக்கிறது என்றும் தெரிவித்தனர். மேலும் எவ்வித இடையூறும் இன்றி யானைகள் சாலையை கடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் குழு, அதிகாரிகளை அறிவுறுத்தியது.
எச்சரிக்கை பலகை
அதன்பேரில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 14 இடங்களில் யானைகள் பாதுகாப்பாக கடந்து செல்ல வசதியாக வேகத்தடை மற்றும் 6 இடங்களில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த எச்சரிக்கை பலகையில், யானைகள் நடமாடும் இடம் என்றும், இங்கு செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.