ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தொழிலாளி சாவு
ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார்.
ஆறுமுகநேரி:
கன்னியாகுமரி மாவட்டம் நாவல்காடு பகுதியைச் சேர்ந்தவர் சியாம் (வயது 46). தொழிலாளி. இவருடன் சக தொழிலாளிகளான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் மேலக்குடி பகுதியை சேர்ந்த உதயகுமார் மகன் அஜித் சிங் (35), மற்றும் நாவல்காட்டைச் சேர்ந்த ஐசக் மகன் மனோ சிங் ஆகியோர் ஆறுமுகநேரி பகுதியில் புதிய கட்டிடங்களுக்கு வர்ணம் பூசும் வேலை செய்து வந்தனர். இதற்காக இவர்கள் ஆறுமுகநேரியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இரவு தங்களுடைய பெயின்டிங் வேலைக்கான பொருட்கள் வாங்குவதற்காக திருச்செந்தூர் இரவு 8 மணியளவில் 3 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். ஒரு மோட்டார் சைக்கிளை மனோ சிங் ஓட்ட, பின்னால் அஜித் சிங் இருந்துள்ளார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் சியாம் சென்றுள்ளார்.
ஆறுமுகநேரி அருகே அடைக்கலாபுரம் சாலையில் சென்றபோது மனோ சிங் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகின. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து அஜித்சிங்கும், மனோசிங்கும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் அந்த 2 பேரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று காலையில் அஜித் சிங் நினைவு திரும்பாமலேயே பரிதாபமாக இறந்து போனார். மனோசிங் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.