தூத்துக்குடியை பனைபொருள் உற்பத்தியில் முதன்மை மாவட்டமாக மாற்ற நடவடிக்கை: கலெக்டர் செந்தில்ராஜ்
தூத்துக்குடி பனைபொருள் உற்பத்தியில் முதன்மை மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி பனைபொருள் உற்பத்தியில் முதன்மை மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
நவீன முறையில் பயிற்சி
தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியம், நெல்லை மாவட்ட பனை பொருட்கள் கூட்டுறவு சம்மேளனம், ஆகியவை இணைந்து பனைவெல்ல கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நவீன முறையில் பனைவெல்லம், பணங்கற்கன்டு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, மற்றும் இலவச உபகரணங்கள் வழங்கும் விழா காயல்பட்டினம் அருகே உள்ள ஓடைக்கரையில் நடைபெற்றது.
விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். விழாவில் பதனீர் பதப்படுத்தும் பெண் தொழிலாளர்களுக்கு இலவச உபகரணங்களை வழங்கி கலெக்டர் பேசியதாவது:-
நவீன முறையில் பயிற்சி
பனை பொருள் உற்பத்தியில் நவீன முறையை கையாண்டு வெற்றி பெற 50 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பழைய முறையில் பனைபொருள்களை பழைய முறையில் தயாரிப்பதில் இருந்து மாற்றம் செய்து, நவீன முறையில் தயாரிக்க பயிற்சி அளிக்க படுகிறது. பயிற்சி முடிந்த பின், புதிய முறையில் தொழில் நடத்தவும் மானியத்துடன் வங்கி கடன் பெற்று தர அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கோவை போன்ற மாவட்டங்களில் தென்னை மரத்தில் உள்ள உணவுப் பொருட்களை வைத்து அப்பகுதி வளர்ச்சியடைந்துள்ளது. அதே போல தூத்துக்குடி மாவட்ட மக்களும் முன்னேற பயிற்சி எடுக்க வேண்டும். பதனீரை பதப்படுத்தி சென்னை மற்றும் பல இடங்களுக்கு கொண்டு போய் விற்பனை செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். பனைவெல்லத்தை பயன்படுத்தினால் நல்லது. சர்க்கரை வியாதி உள்ளவர்களும் பனைவெல்லத்தை பயன்படுத்துகிறார்கள்.
பனைவிதைகள் நடவு
வேம்பார், வைப்பாறு பகுதியில் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், மாதங்களில் பனைவிதைகள் நடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பனை ஏறுவதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இளைஞர்கள் இந்த தொழில் செய்ய சிரமப்படுகிறார்கள. இந்த தொழிலுக்கு புதியவர்கள் வராமல் இருக்கிறார்கள். எனவே தான் அரசு இந்த தொழிலை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வதற்காக தான் இதுபோன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பனை ஏறும் தொழிலாளர்கள் மற்றும் அதனோடு சார்ந்து உள்ள தொழிலாளர்கள் பனை பொருள்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி அதனை அதிக அளவு லாபம் பெறுவதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும். பனை பொருளை உற்பத்தி செய்வதில் தூத்துக்குடி மாவட்டம் முதன்மையான மாவட்டமாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் 2 பெண்களுக்கு பதனீர் காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கும் உபகரணங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உதவிகலெக்டர் புகாரி, திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி பேராசிரியர் ரவீந்திரன், மதுரை மண்டல கதர் கிராமத்தொழில்கள் துறை துணை இயக்குனர் அருணாச்சலம், தூத்துக்குடி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சுந்தரராஜன், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது, தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குனர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாம் நிகழ்ச்சியில் தூத்துக்குடி நெல்லை மாவட்ட பனை வெல்ல கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்ட பனை பொருட்கள் கூட்டுறவு சம்மேளன மேலாண்மை இயக்குனர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.