ரூ.25 லட்சம் தங்கத்துடன் தலைமறைவான நகைப்பட்டறை ஊழியர் கைது

ரூ.25 லட்சம் தங்கத்துடன் தலைமறைவான நகைப்பட்டறை ஊழியர் 7 மாதத்திற்கு பிறகு பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-04 11:30 GMT
கோப்பு படம்
மும்பை, 
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் மினாஜூதீன் சேக் (வயது32). இவர் கடந்த 18 ஆண்டாக மும்பை தகிசர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி நகைபட்டறை நடத்தி வந்தார். இதனால் அப்பகுதியை சேர்ந்த நகைக்கடைக்காரர் ஒருவர் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கொடுத்து நகை செய்து தரும்படி தெரிவித்தார். இதற்கிடையில் கடந்த கொரோனா காலத்தில் வருமானம் இழந்ததால் வீட்டு செலவிற்காக கடன் பெற்று இருந்தார். இதனை திருப்பி கொடுக்க முடியாமல் போனதால் கடன் தொல்லையில் அவதி அடைந்து வந்தார். கடன் தொல்லையில் இருந்து விடுபட ரூ.25 லட்சம் நகைகளை அபேஸ் செய்தார். பின்னர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். இது பற்றி அறிந்த நகைக்கடைக்காரர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் படி போலீசார் தங்கத்துடன் தலைமறைவான பட்டறை உரிமையாளரை தேடிவந்தனர். கடந்த 7 மாதமாக தேடி வந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்ததாக தெரியவந்தது. இதனால் தனிப்படை போலீசார் பஞ்சாப் மாநிலத்திற்கு சென்று விசாரித்தனர். உள்ளூர் போலீசாரின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது போலி பெயருடன் மினாஜூதீன் சேக் வசித்து வந்தது தெரியவந்தது. அபேஸ் செய்த தங்கத்தை நகைக்கடையில் விற்று சொத்துக்களை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து மும்பை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்