வறண்டு விடும் நிலையில் சோழவரம் ஏரி
சோழவரம் ஏரி வறண்டு விடும் நிலையில் உள்ளது.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11.757 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் குடிநீர் தேவை அதிகரிப்பு மற்றும் வெப்பத்தால் நீர் ஆவியாதல் உள்ளிட்டவற்றால் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஏரிகளில் மொத்தம் 7.570 டி.எம்.சி. கனஅடி தண்ணீர் மட்டும் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 64 சதவீதம் ஆகும். இதில் சோழவரம் ஏரியில் தண்ணீர் இருப்பு 155 மில்லியன் கன அடி மட்டுமே உள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1.081 டி.எம்.சி. ஆகும். ஏரியில் 14 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் ஏரியில் இருக்கும் தண்ணீரை முழுவதும் எடுத்து குடிநீராக பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டிருக்கிறார்கள். இதையடுத்து இந்த ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்காக 244 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதனிடையே புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.300 டி.எம்.சி. ஆகும். இதில் 2.906 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. குடிநீர் தேவைக்காக 440 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டி.எம்.சி. ஆகும். இதில் 2.441 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. 156 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி. ஆகும். ஏரியில் தற்போது 1.595 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 663 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியில் 473 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடி ஆகும்.