மரக்கிளை முறிந்து அரசு பஸ் மீது விழுந்தது
மரக்கிளை முறிந்து அரசு பஸ் மீது விழுந்ததில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
துறையூர்:
மரங்கள் சாய்ந்தன
திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. திடீரென்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் துறையூரில் பஸ் நிலையம், போலீஸ் நிலையம், துறையூரில் இருந்து முசிறி செல்லும் சாலை, ஆத்தூர் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் சாலையின் குறுக்கே ராட்சத புளியமரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதில் நரசிங்கபுரத்தில் இருந்து துறையூர் நோக்கி வந்்த அரசு பஸ் மீது மரத்தின் கிளை விழுந்ததில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்தது. உடனடியாக டிரைவர் பிரேமானந்த் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தினார். உடைந்த கண்ணாடி துண்டுகள் பயணிகள் மீது தெறித்தன. இருப்பினும் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இதற்கிடையே அருகில் இருந்த மின்மாற்றியின் மீதும் புளியமரம் விழுந்திருந்தால், மின்கம்பிகள் அறுந்து பஸ்சின் மீது விழுந்தன. இது பற்றி தகவல் அறிந்து வந்த துறையூர் பணிமனை மேலாளர் ராஜசேகர், பஸ்சில் இருந்து பயணிகளை இறங்க வேண்டாம் என்று கூறினார். மேலும் மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அங்கு வந்து மின்சாரத்தை துண்டித்ததால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதேபோல் எதிரே வந்த காரில் மரக்கிளை விழுந்தது. இதில் காரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 3 மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மின்சாரம் துண்டிப்பு
இதேபோல் துறையூரில் உள்ள சிவன் கோவிலின் பெயர் பலகை சூறாவளி காற்றில் சாய்ந்தது. துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள கிராமங்களில் சூறாவளி காற்றின் காரணமாக வீடுகள் சேதம் அடைந்தன. துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நகரில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினார்கள். மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, துறையூர் நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது.