ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

சேலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.

Update: 2022-05-03 23:04 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.
சங்ககிரி
தலைவாசல் அருகே உள்ள தென்குமரை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா மணிகண்டன் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் பிரதீஷ் முன்னிலை வகித்தார்.  ஒன்றிய குழு உறுப்பினர் சாத்தபாடி மணி என்கிற பழனிசாமி கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு ஊராட்சிக்கு அரசு வழங்கும் திட்டங்களை விளக்கி பேசினார்.  தலைவாசல் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மயில் மேல்அழகன் கூட்டத்தில் கலந்துகொண்டுகிராம சபை கூட்டத்தை ஆய்வு செய்தார். முடிவில் ஊராட்சி செயலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.
சங்ககிரி அருகே மோரூர் மேற்கு ஊராட்சி நாகிச்செட்டிப்பட்டி காளியம்மன் கோவில் திடலில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் எம்.கலாமோகன்ராஜ் தலைமை தாங்கினார். சங்ககிரிவட்டார வளர்ச்சி அலுவலர் முத்து முன்னிலை வகித்தார். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல், பள்ளி உள்கட்டமைப்பு அமைத்தல், தெருக்கள், வீதிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துணைத்தலைவர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன், வேளாண்மை உதவி அலுவலர் வேல்முருகன் உள்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சிவகுமார் நன்றி கூறினார்.
தேக்கம்பட்டி
தாரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட 17 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது.அதன்படி ஆரூர்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள் காங்கேயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதா, கூட்டுறவு சங்கத்தலைவர் காங்கேயன், கிராம நிர்வாக அலுவலர் கலையரசி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 5 இடங்களில்  புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கவும், புதிதாக ஊராட்சி கட்டிட அலுவலகம் கட்டவும், குப்பகவுண்டனூர் பகுதியில் புதிய மயானம் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதில் ஊராட்சி செயலாளர் கணேசன் தீர்மானங்களை வாசித்து ஒப்புதல் பெற்றார்.
தேக்கம்பட்டி ஊராட்சியில் தலைவர் சுதா ரமேஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலாளர் தயாளன் ஆண்டு அறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் பரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் சிவஞானவேல், செல்வமணி வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும், கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம், முதியோர் உதவித்தொகை கோருதல், விவசாய கடன் அட்டை, குடிநீர், மின்சாரம், சாக்கடை கால்வாய்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் நாகமுத்து, கோவிந்தன், ஜெகன், பிரகாஷ், கோகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொளத்தூர்
கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 14 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கருங்கல்லூர் ஊராட்சி மற்றும் கண்ணாமூச்சி ஊராட்சிகளில் நடந்த கிராமசபை கூட்டம் மேட்டூர் உதவி கலெக்டர் வீர பிரதாப் சிங் தலைமையில் நடந்தது. மேலும் கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜேம்ஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் பழனி வீரன் (கருங்கல்லூர்), பிரியதர்ஷினி (காவிரிபுரம்) கனகா முனுசாமி (தின்னப்பட்டி) உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள். 
எடப்பாடிைய அடுத்த இருப்பாளி ஊராட்சியில் தலைவர் அலமேலு ஈட்டிகிருஷ்ணன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு துறைகளிலிருந்து அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.  ஒன்றிய கவுன்சிலர் நடேசன், கால்நடை டாக்டர் வெள்ளையகவுண்டர், வேளாண்மை துறை அலுவலர் மகாலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து  துப்புரவு பணியாளர்களுக்கு ஊராட்சி மன்றம் சார்பில் 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன. பின்னர் இருப்பாளி ஈஸ்வரன் கோவிலில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும் செய்திகள்