சென்னிமலை முருகன் கோவிலில் மூலவர் சிலை தேய்மானத்தை தடுக்க புதிய முடிவு
சென்னிமலை முருகன் கோவிலில் மூலவர் சிலை தேய்மானத்தை தடுக்க புதிய முடிவு எடுக்கப்பட்டது.;
சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவிலில் மூலவர் சிலை தேய்மானத்தை தடுக்க புதிய முடிவு எடுக்கப்பட்டது.
சென்னிமலை முருகன்
சென்னிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற, பழமையான கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற தீர்த்த குடங்கள் எடுத்து வருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் மலையை சுற்றி வந்து, படிக்கட்டுகள் வழியாக நடந்து சென்று முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்வது வழக்கம்.
அதேபோல் சென்னிமலை வட்டார கைத்தறி மற்றும் சாயச்சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக பாலாபிஷேகம் நடைபெறும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பாலாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.
தற்போது கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்பதால் வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தேய்மானம்
இந்தநிலையில், சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள மூலவர் சிலை பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது என்பதால் தேய்மான நிலையில் உள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொண்டு வரும் பால், இளநீர் போன்ற அபிஷேக திரவியங்களால் அபிஷேகங்கள் செய்தால் மேலும் மூலவர் சிலை மேலும் தேய்மானம் ஏற்படும் என்றும், அதனால் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரவியங்களால் அபிஷேகம் செய்வதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மற்றொரு தரப்பினர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. ஆண்டாண்டு காலமாக நடைபெறும் பாலாபிஷேகத்தை இந்த ஆண்டும் அதே போல் நடத்த அனுமதிக்க வேண்டும் என கோவில் நிர்வாகிகளிடம் முறையிட்டனர். இதையடுத்து தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்ததார். இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
சுமூக முடிவு
இந்த பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது. அதாவது வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் அக்னி நட்சத்திர விழாவுக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொண்டு வரும் பால், இளநீர் போன்ற அபிஷேக திரவியங்களை அப்படியே எடுத்து மூலவர் சிலையில் அபிஷேகம் செய்யாமல், ஒவ்வொரு பக்தர்களின் குடங்களில் இருந்தும் சிறிய கரண்டியில் திரவியங்களை எடுத்து மூலவரின் திருவடியில் அபிஷேகம் செய்ய வேண்டும் என்றும், மீதம் உள்ள திரவியங்களை வெளியே உள்ள உற்சவர் முருகனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் கோவில் நிர்வாகத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி உத்தரவிட்டார். இதனை இரு தரப்பினரும் ஏற்று கொண்டு, அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பி.செங்கோட்டையன், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சி.பிரபு, பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், கோவில் செயல் அலுவலர் மு.ரமணிகாந்தன், முன்னாள் எம்.எல்.ஏ பூந்துறை பாலு, பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளான ஆர்.பழனிவேலு, பொன்.ஈஸ்வரமூர்த்தி, சுப்புசாமி மற்றும் 4 நாட்டு கவுண்டர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் சு.முத்துசாமி உற்சவருக்கு அபிஷேகம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டார்.