அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்
அட்சய திருதியை விழாவை முன்னிட்டு ஈரோடு தங்க நகைக்கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
ஈரோடு
அட்சய திருதியை விழாவை முன்னிட்டு ஈரோடு தங்க நகைக்கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
அட்சய திருதியை
அட்சய திருதியை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் தங்கம் வாங்கினால் இந்த ஆண்டு முழுவதும் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் ஆர்வமாக தங்கம் மற்றும் சுபகாரிய நிகழ்வுகளுக்கான பொருட்களை அட்சய திருதியை நாளில் வாங்குவது வழக்கம்.
அதன்படி நேற்று ஈரோட்டில் உள்ள தங்க நகைக்கடைகளில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். நகைக்கடைகளில் அட்சயதிருதியைக்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தங்கம் வாங்கியவர்களுக்கு சிறப்பு பூஜை செய்து நகைகள் வழங்கப்பட்டன.
தங்க நகை கடைகளில் கூட்டம்
ஈரோடு பொன் வீதியில் உள்ள நகைக்கடைகளில் நேற்று ஏராளமானவர்கள் வந்து நகைகள் வாங்கினார்கள். இதனால் பொன்வீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதுபற்றி நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கூறும்போது, கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக பொன் வீதியில் தங்க நகைக்கடைகளில் வியாபாரம் குறைந்து இருந்தது. பொதுமக்கள் நடமாட்டமும் இல்லை. சிறு நகைக்கடை நடத்துபவர்கள் தொழிலை விட்டு விடும் நிலை ஏற்பட்டது. இந்த அட்சய திருதியைக்கு ஏராளமான மக்களை இந்த வீதியில் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற மக்கள் வந்தால் எங்கள் தொழில் வளர்ச்சி பெறும் என்றார்.
ஆர்.கே.வி.வீதியில் நகைக்கடைகள் அதிகம் இருப்பதால் அங்கும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தங்க நகைக்கடைகள் மட்டுமின்றி, வெள்ளி நகைக்கடைகளிலும் அதிக மக்கள் கூட்டமாக இருந்தது. மங்கல பொருட்களையும் பலர் வாங்கிச்சென்றனர். அட்சய திருதியை நாளில் பிறருக்கு உணவு அளிப்பதே சிறந்தது என்று பலரும் சாலையோர மக்களுக்கு உணவு வழங்கியதையும் பார்க்க முடிந்தது.