முஸ்லிம்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை
தென்காசி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் முஸ்லிம்கள் திரளாக கலந்துகொண்டனர்.
தென்காசி:
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு தென்காசி மவுண்ட் ரோடு பகுதி, உடையார் தெரு ெரயில்வே கேட் அருகில் ஆகிய இரண்டு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர்.
கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். காயிதே மில்லத் திடலில் மாநில செயலாளர் முகம்மது ஒலி தலைமை தாங்கி பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார். மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் மற்றும் டவுன் கிளை நிர்வாகிகள் அப்துல் ஜப்பார், செய்ப்பு மைதீன், சம்சுதீன், செய்யது மசூது, துராப்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொழுகைக்கு முன்பாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் பித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி புதிய, பழைய பஸ் நிலையம், மருத்துவமனை பஸ் நிறுத்தம் மற்றும் தினசரி மார்க்கெட் பகுதிகளில் இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் 3 இடங்களில் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது. மஸ்ஜித் முபாரக் முன்புள்ள பஜார் திடலில் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் சைபுல்லா ஹாஜா பைஜி தொழுகை நடத்தினார்.
செங்கோட்டையில் சுலைமான் நபி ஜீம்மா பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டியை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. பள்ளி இமாம் செய்யது சுல்தான்பைஜி சிறப்பு தொழுகை நடத்தினார். பள்ளி ஜமாத் கமிட்டி தலைவர் செய்யது பட்டாணி, துணைத்தலைவர் முகம்மது இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பம்பு ஹவுஸ் ரோட்டில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. மாநில செயலாளர் நெல்லை பைசல் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினார். நகரத்தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் கரீம் மற்றும் நிர்வாகிகள் உள்பட ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். இதேேபால் செங்கோட்டை மேலூர் முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளி, காதர் ஒலி ஜூம்மா பள்ளி, தஞ்சாவூர் தெரு மஸ்ஜி துன்நூர் ஜூம்மா பள்ளியிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.