நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்
நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
திருக்காட்டுப்பள்ளி
தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி புறப்பட்ட அரசு டவுன் பஸ் ஒன்று கண்டியூர் சாலை திருப்பத்தில் சென்றபோது எந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக நடு வழியில் நின்று விட்டது. பஸ் டிரைவர் எவ்வளவோ முயற்சி செய்தும் பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதனால் திருக்காட்டுப்பள்ளி-கண்டியூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு தற்காலிகமாக பழுது நீக்கப்பட்டு பணிமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. திருக்காட்டுப்பள்ளியின் முக்கியமான சாலை திருப்பத்தில் பஸ்நின்று விட்டதால் இரண்டு சக்கர, கார்களில் வந்தவர்கள் சிரமப்பட்டனர். திருக்காட்டுப்பள்ளியில் கடந்த மாதம் காமராஜர் கடைவீதியில் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். அப்போது கண்டியூர் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஏனோ கண்டியூர்சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்படவில்லை. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டிருந்தால் பழுதான பஸ் அதே பகுதியில் ஓரங்கட்டி போக்குவரத்து சீராக மேற்கொள்ள வழி ஏற்பட்டிருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.